சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்” என்று திமுக கடுமையாக சாட்டியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிச்சாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் ! மன்னிக்கவும் மாட்டார்கள்! என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக விடுத்துள்ள அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருந்தார். தமிழக மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார்.
எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிசாமியின் காவல்துறை. ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுபோன்ற காட்சிகளைக் கண்ட மக்கள் பதறினார்கள்.
இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதல்வர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய் முகத்தை வெளிப்படுத்தியது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள்: பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.
நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி: அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமை களுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.
உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே: உதய் மின் திட்டத்தால் தமிழகத்துக்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழகம் ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழக அரசின் மேல் விழுந்தது.
இதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார். இன்னும் ஒரு வேடிக்கை. பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதல்வர் பதவிக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதல்வர் ஆனார் என்பதை ஊரும் உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதல்வர் ஆனதுடன், யாரால் முதல்வர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி!
அது மட்டும் அல்ல. கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய் முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா. உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிசாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிசாமி: பாஜக அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அதிமுக எம்பி-க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அதிமுக.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி: எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
தொழில் வளர்ச்சியில் கடைசி இடம்: தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.
ஒரே நாடு ஒரே தேர்தல்: ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல் பாஜக ஆட்சி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறியது கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பாஜக அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே.
இப்படித் தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பாஜகவிடம் கூட்டணி இல்லை என்று கூறி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் திமுக கூட்டணிக்குச் சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழக மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல!”.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.