டெல்லி: ஒரு வருடத்திற்கும் மேலாக EVMகள் தொடர்பான RTIக்கு பதில் அளிக்காத  இந்திய தேர்தல் ஆணையத்தை  தலைமை தகவல் ஆணையம் கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இருப்பதாக தலைமை தகவல் ஆணையம் ஹீரலால் சமரியா கூறி உள்ளார்.

நாட்டில் தேர்தலின்போது பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினா, EVM நம்பக்கத்தனை குறித்து, ஆர்டிஐ எனப்படும் தகவல் உரிமை பெறும் சட்டம் கேள்வி எழுப்பியதற்கு   உரிய காலத்திற்குள் முறையான பதில் அளிக்காத தேர்தல் கமிஷன் மீது, மத்திய தகவல் கமிஷன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உட்பட, ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள், முன்னணி தொழில்நுட்ப வல்லுனர்கள், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவன பேராசியர்கள் குழு கடந்த 2022ம் ஆண்டு மே 2ந்தேதி, இந்திய  தலைமை தேர்தல் கமிஷனிடம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி,  மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ‘விவிபாட்’ எனப்படும் ஓட்டு ஒப்புகை சீட்டு இயந்திரம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும்படி  மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீது உரிய பதில் கிடைக்காததை அடுத்து, இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விபரங்கள் அளிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2022 நவ., 22ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தேர்தல் கமிஷன் 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை. இதை மூத்த அதிகாரிகளின் கவனத்துக்கு தேவசகாயம் எடுத்து சென்றார். அவர்களும் இதை விசாரிக்கவில்லை.

இதுதொடர்பாக  விசாரித்த தலைமைதகவல் கமிஷன், தேர்தல் கமிஷனின் அலட்சிய போக்கு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. தகவல் கமிஷனர் ஹீராலால் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்ததுடன்,  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கும்படி பொது தகவல் அதிகாரிக்கு தலைமை தகவல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.