பவாமோகதாரா, சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் கிராம வாசிகள் தங்கள் கிராமத்தில் இறந்த 130 வயது முதலைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதலை என்றாலே மக்களுக்கு தனி பயம் உண்டு. ஆட்கொல்லி மிருகங்களில் மிகவும் அபாயகரமானது என கூறப்படும் முதலைக்கு அருகில் செல்லவும் மக்கள் அஞ்சுவார்கள். அந்த அளவுக்கு முதலையிடம் பயம் கொண்ட மக்களிடம் நட்புடன் வாழ்ந்த ஒரு முதலை குறித்து தற்போது பார்ப்போம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள பவாமோகதாரா என்னும் சிற்றூரில் ஒரு பெரிய குளம் உள்ளது. அந்த குளத்தில் ஒரு முதலை வெகு நாட்களாக வசித்து வந்துள்ளது. அங்குள்ள மக்களை சிறிதும் பயமுறுத்தாமல் வெகு காலமாக இருந்து வந்த அந்த முதலைக்கு அவ்வூர் மக்கள் கங்காராம் என பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.
வனத்துறையினரால் 130 வயது என கணக்கிடப்பட்ட அந்த முதலிக்கு அருகே சிறுவர்கள் பயமின்றி நீச்சல் அடிப்பார்கள். அவர்களை ஒன்றும் செய்யாமல் முதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஊருக்கு புதியதாக வருபவர்கள் தன்னைக் கண்டு அஞ்சுவார்கள் என உணர்ந்ததாலோ என்னவோ புதியவர்களைக் கண்டால் குளத்தின் அக்கரைக்கு முதலை தானாகவே சென்று விடும்.
அத்துடன் கிராம மக்கள் அளிக்கும் பருப்பையும் சாதத்தையும் முதலை விரும்பி சாப்பிடுவது மற்றொருஆச்சரியமான விஷயம் ஆகும். மொத்தத்தில் அந்த முதலை கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு செல்லமாக இருந்துள்ளது. கிராம மக்களில் சிலர் அந்த முதலையை தெய்வப் பிறவி என கூறும் நிலைக்கே சென்றுள்ளனர்.
நேற்று முன் தினம் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் குளத்தின் கரையில் முதலை கங்காராம் அசைவற்று கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார். உடனடியாக அங்கு விரைந்த வன இலாகா அதிகாரிகள் முதலை இறந்து விட்டதை உறுதிப் படுத்தி உள்ளனர். அந்த முதலை கிராம மக்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வயது முதிர்வால் மரணம் அடைந்தது தெரிய வந்தது.
அதன் பிறகு வனத்துறையினர் கிராம மக்களிடம் முதலையின் உடலை ஒப்படைத்தனர். கிராம மக்கள் சுமார் 500 பேர் கூடி அந்த முதலைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் அந்த குளத்தங்கரையிலேயே முதலை புதைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முதலைக்கு ஒரு சிலை வைக்க கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.