மார்ச் 24 ம் தேதி ரம்ஜான் நோன்பு துவங்கிய நிலையில் ஏப்ரல் 22 ம் தேதி வாக்கில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

காலை சூரிய உதயம் தொடங்கி சூரியன் மறையும் வரை பகல் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் மாலையில் தொழுகைக்குப் பின் உணவருந்தி நோன்பு திறப்பார்கள்.

ஒரு மாதம் முழுவதும் இந்த நோன்பு தொடரும் நிலையில் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், வயதானவர்கள் என்று குறிப்பிட்ட சிலர் மட்டும் நோன்பு இருப்பதில் இருந்து விலகியிருக்கலாம்.

சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் ஆகும் நேரம் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே உள்ளவர்களுக்கும் மேலே உயரத்தில் உள்ளவர்களுக்கும் வித்தியாசப்படுவதை அடுத்து இவர்களின் நோன்பு திறப்பு நேரமும் வித்தியாசப்படுகிறது.

துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா 160 மாடி அடுக்குமாடி கட்டிடத்தின் 80 வது மாடிக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு சூரிய அஸ்தமனம் 2 நிமிடம் கூடுதலாகவும் 150 வது மாடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 3 நிமிடம் கூடுதலாகவும் உள்ளது.

இதனால் 80வது மாடிக்கு மேல் வசிப்பவர்கள் நோன்பு திறக்க 2 நிமிடம் கூடுதலாகவும் 150வது மாடிக்கு மேல் வசிப்பவர்கள் 3 நிமிடங்கள் கூடுதலாகவும் காத்திருக்க வேண்டும்.

இதுகுறித்து துபாயின் உயரிய மதகுரு ஏற்கனவே அறிவித்துள்ளதை அடுத்து புர்ஜ் கலீஃபா அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் இதனை கடைபிடித்து வருகிறார்கள்.