ஜலந்தர்: பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தனது வேட்புமனுவை, இயற்பெயரான அஜய்சிங் தர்மேந்திரா தியோல் என்ற பெயரிலேயே தாக்கல் செய்துள்ளதால், அவரின் பெயர் வாக்கு இயந்திரத்தில் எவ்வாறு இடம்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதியில், அகாலிதளம் – பாரதீய ஜனதா கூட்டணியில் போட்டியிடுகிறார் புகழ்பெற்ற நடிகர் சன்னி தியோல். இவர் தனது இயற்பெயரில் வேட்புமனுவை தாக்கல் செய்தாலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில், இவரின் சினிமா பெயரான சன்னி தியோல்தான் இடம்பெற வேண்டுமென பா.ஜ. விரும்புகிறது.

ஏனெனில், அஜய்சிங் தர்மேந்திரா தியோல் என்ற பெயர் பலரும் அறியாத ஒன்று. எனவே, நடிகருக்காக வாக்களிக்க எதிர்பார்ப்போடு வரும் மக்கள், பெயரைக் காணாமல் குழம்பி விடுவார்கள் என பா.ஜ. தரப்பில் கவலைப்படுகிறார்கள்.

இதனால், தேர்தல் கமிஷனிடம், வாக்கு இயந்திரத்தில், சன்னி தியோல் என்ற சினிமா பெயரையே பயன்படுத்த வேண்டுமென பாரதீய ஜனதா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் பெயர், அவர்களின் படம் மற்றும் போட்டியிடும் சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாரதீய ஜனதா திருப்தியடைவதாக இல்லை.