லைகாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியன் 2 படத்தை கைவிட்டு, தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்க ஆயத்தமான ஷங்கர்.

தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து இந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்வதாக அறிவித்தார். ரன்வீர் சிங் விக்ரம் நடித்த வேடத்தில் நடிப்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்நியனை தமிழில் தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து அந்நியன் கதையை நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் ஷங்கர் எப்படி அதனை இந்தியில் ரீமேக் செய்வதாக அறிவிக்கலாம் என்று சண்டைக்கு வந்தார்.

அதற்கு பதிலளித்த ஷங்கர், அந்நியன் படத்தின் கதை என்னுடையது, வசனம் மட்டும்தான் சுஜாதா, படத்தின் கிரெடிட்டிலும் அப்படித்தான் உள்ளது என கூறினார் .

இந்த சர்ச்சைக் காரணமாக அந்நியன் இந்தியில் ரீமேக் செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் நேற்று பென் ஸ்டுடியோஸ் அடுத்து தங்கள் தயாரிப்பில் திரையரங்கில் வெளிவரப்போகும் படங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அக்ஷய் குமாரின் பெல் பாட்டம், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய், ஜான் ஆபிரஹாமின் அட்டாக் படங்களுடன் அந்நியன் இந்தி ரீமேக்கும் அதில் இடம் பெற்றிருந்தது.