மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உள்ளிட்டோரின் கணினிகள் மற்றும் மொபைல் போன்களை வேவு பார்த்ததாக சு.சாமி வெளியிட்ட டிவீட் இந்தியாவை பரபரக்க வைத்திருக்கிறது.

2019ம் ஆண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கணினி மற்றும் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்க்க பெகாசஸ் உளவு மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதாக அப்போது பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் மத்திய மந்திரிகளின் தொலைபேசிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சு.சாமி கூறிய நிலையில் இதுகுறித்த முழுமையான தகவல்கள் இன்றிரவு வாசிங்கடன் போஸ்ட் மற்றும் கார்டியன் இதழில் வெளியாகும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.சி.ஓ. நிறுவனம் தயாரித்த ஒற்றறியும் மென்பொருளான பெகாசஸ், மைக்ரோசாப்ட் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட கணினிகளிலும் ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்போன்களிலும் இயங்கக்கூடியது.

வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் தோன்டித்துறுவி தகவல்களை சேகரிக்கும் இந்த மென்பொருள் எதிர்கட்சியினர் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கையை கண்காணிக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அரசுகள் பயன்படுத்துகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் ஆட்சிக்கட்டிலில் உள்ளவர்களையே உளவு பார்க்க இந்த ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளதோடு நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.