டெல்லி: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு, ஆகஸ்டு முதல் வாரத்தில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த  தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உலக நாடுகளின் தலைவர்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 300க்கும் மேற்பட்டோரின் டெல்லிபோன்கள் வேவு  பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக பாரபட்சமற்ற சுதந்திர விசாரணை நடத்தக் கோரி மூத்தப் பத்திரிகையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் ஏராளமானோர் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளதாக கூறப்படுகிறது. பெகாசஸ்  விவகாரம் தொடர்பகா நாடாளுமன்ற இரு அவைகளும் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேலும் பெகாசஸ் தொடர்பான வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் சூர்யகாந்திடம்  மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முறையிட்டார்.  அப்போது, இந்த விவகாரத்தில்,  பாரபட்சமற்ற சுதந்திர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் இந்த மனுக்கள் அடுத்த வாரம்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.