வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட சாலையை நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

இத்தனை ஆண்டுகாலம் தங்களது அன்றாட தேவைகளுக்காக இந்த கிராம மக்கள் மலையில் இருந்து காட்டு வழியாக பல கிலோமீட்டர் நடந்தே சென்று வந்த நிலையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஜவ்வாது மலையில் அமைந்துள்ள இந்த மலைகிராமத்தில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சாலையை மாணவர்கள் மட்டுமன்றி மருத்துவ வசதிக்காக செல்வோரும் இனி பயன்படுத்த முடியும் என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

தற்போது வரை காட்டு விலங்குகள் மற்றும் பாம்புகளுக்கு பயந்து காட்டு வழியாக பகல் நேரத்தில் மட்டுமே நடந்து சென்று வந்த மக்கள் இனி அவசர காலத்திலும் இரவு நேரங்களிலும் கூட சென்று வரக்கூடிய வகையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் குடும்ப தேவை கருதி புதிய குடியிருப்பு பகுதிகளை ஏற்படுத்திக் கொண்ட கிராம மக்களின் தேவையை அறிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று இதுபோன்ற வசதிகளை அரசாங்கம் அவ்வப்போது ஏற்படுத்தி தருகிறது.

அதேவேளையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாத இந்த மலைகிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதே பகுதியில் மேலும் சில மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.