இன்று போல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு, சிதம்பரத்தின் டுவிட்டர் கணக்கில் அவரது குடும்பத்தினர் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம்கணிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வாழ்த்து செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக சிதம்பரத்தின் டுவிட்டர் கணக்கில், “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி. பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே? தற்பொழுது நடைபெறும் துன்புறுத்தல் முடிந்த பிறகு, பிரதமர் மோடியின் விருப்பப்படி மீண்டும் மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று அவரது குடும்பத்தினரால் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.