மும்பை: இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பழம்பெரும் இந்தி நடிகர் 77 வயதான அமிதாப் பச்சன்.

கடந்த 1960களிலிருந்து இவர் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் பால்ய கால நண்பர்.

இவர் ஏற்கனவே பத்ம விருதுகளைப் பெற்றுள்ளவர். தற்போது தனது துறையின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இந்தியின் பழம்பெரும் நடிகர்களான திலீப்குமார் மற்றும் சசிகபூர் ஆகியோருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழை எடுத்துக்கொண்டால், கடந்த 1996ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், 2010ம் ஆண்டு இயக்குநர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.