சென்னை: தாமதப்படுத்திய ஓய்வூதிய பணப்பலன்களை 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்கள், நிலுவையில் உள்ள சம்பளப்பாக்கி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு போக்குவரத்துதொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, ஓய்வூதிய பலன்களை வழங்க தமிழகஅரசு சம்மதம் தெரிவித்து அதற்கான நிதியை ஒதுக்கியது. அரசின் மெத்தனப்போக்கு காரணமாக ஏராளமான ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநர், நடத்துநர்களாக பணியாற்றிய ராமமூர்த்தி உள்பட 11 பேர், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களை வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 விழுக்காடு வட்டியுடன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி வைத்தியநாதன் அமர்வில் விசாரிக்கப்பட்டு  வந்தது. வழக்கை பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், தாமதப்படுத்திய ஓய்வூதிய பணப்பலன்களை 6 விழுக்காடு வட்டியுடன், ஆறு தவணைகளாக வழங்கும்படி வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இவ்வழக்கிலும் ஓய்வுபெற்ற ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 6 விழுக்காடு வட்டியுடன் வழங்கிட அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்தத் தொகையை மார்ச் 1 தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 விழுக்காடு வட்டியைச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.