மயிலாடுதுறை: பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு தருமபுர ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு ஆன்மீக அரசு என நிரூபித்துவிட்டதாக கூறி உள்ளார்.
தருமபுர ஆதின பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழகஅரசு தடை விதித்தது இந்துமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பல இந்து அமைப்புகள், பாஜக ஒன்றிணைந்து, அரசின் உத்தரவை மீறி பட்டினப்பிரவேசம் நடத்துவோம் என்று அறிவித்தன. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து சில ஆதீனங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பாரம்பரியாக நடத்தப்பட்டு வரும் விழாவை நடத்த அனுமதி வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மரபுப்படி பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி குன்றக்குடி, மயிலம், பேரூர் ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று பட்டின்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை மாவட்ட நிர்வாகம் வாபஸ் பெற்றது.
இதையடுத்து, பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியாக, ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமக்க அனுமதி வழங்கியதின் மூலம் தற்போது நடப்பது ஆன்மீக அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெய்ப்பித்திருப்பதாக தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடையை நீக்க ஆதரவு அளித்த அறநிலையத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த ஆண்டு பட்டினப்பிரவேசம் தடை ஏற்படுத்திய சர்ச்சையை உண்டானதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். வரும் 21ம் தேதி குருபூஜையும், 22ம் தேதி ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.