சென்னை

எந்த காலத்திலும் இனி கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்னும் பேச்சுக்கு  இடமில்லை என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இன்று சமயபுரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர்  ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து  திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி – ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு செய்தனர். யானை பராமரிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அமைச்சர் சேகர்பாபு “ஐந்தாண்டுகள் கோவில்களில் யானை பாகன்களாக பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. விரைவில் அனைவருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும்

தமிழ்நாட்டில் 180 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்   இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்

மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்களால் திருக்கோவில் நிலங்கள் இனாமாகக் கொடுத்தது. அந்த நிலங்களுக்குப் பட்டா கொடுக்க இயலாது. மயிலாடுதுறையில் அவ்வாறாகப் பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே எப்போதும் திருக்கோயில் நிலங்களுக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்தார்.