பெரியகுளம்: துணைமுதல்வர் ஓபிஎஸ் தொகுதியான பெரியகுளம் பகுதியில்  ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக, அமமுக.ஆதரவுடன் திமுக  உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.  தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தலில்,  16 வாக்குகளில் 9 வாக்குகள் பெற்று  பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக   திமுக.கவுன்சிலர் தங்கவேலு வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டமாக வார்டுகள், பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது  தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக.8 இடங்களிலும், அதிமுக 6,  தேமுதிக 1, அமமுக 1 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து, ஒன்றிய தலைவர் தேர்வுக்கு மறைமுகத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதற்கிடையில் திமுக உறுப்பினர் ஒருவர் அதிமுகவுக்கு மாறியல் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதனால், தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாகவே இருந்தது. இந்த நிலையில்,  இதுதொடர்பான வழக்கில், தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. அதன்படி 15ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலுக்கு  பெரியகுளம் உதவி ஆட்சியர் சினேகா முன்னிலை வகித்தார். காவல் துணை காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில் 9 வாக்குகள் பெற்று திமுக உறுப்பினர் தங்கவேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தங்கவேலுக்கு திமுக உறுப்பிர் மற்றும்,   தேமுதிக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் பாக்கியம், மருதையம்மாள் ஆகியோர் ஆதரவு வழங்கியதால்,  திமுக.கவுன்சிலர் தங்கவேல் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். பின்னர், மாலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் திமுக, தேமுதிக.ஆதரவுடன் அமமுக.கவுன்சிலர் மருதையம்மாள் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியில் திமுக வெற்றி பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது  வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.