சென்னை:

நாட்டிலேயே முதன்முறையாக,  சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக  வாக்குப்பதிவு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த வாக்குப்பதிவு மையத்தில், மனநலம் குணமடைந்த 192 பேர் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மனநல மருத்துவத்துக்கென்று பிரத்யேக மருத்துவமனை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது சுமார் 1000 பேர் வரை உள்நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலர் குணமடைந்த நிலையில் அவர்களை அவரது உறவினர்கள் யாரும் அழைத்து செல்லாத நிலையில்,  அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குணமடைந்து அங்கு தங்கியிருந்து பல்வேறு பணிகளை செய்து வரும்  114 ஆண்கள், 78 பெண்கள் உள்பட  மொத்தம் 192 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்ய மருத்துவமனை இயக்குநர் பூர்ண சந்திரிகா  தேர்தல் ஆணையதுடன் பேசி அனுமதி பெற்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்திலேயே பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முன்னதாக   மருத்துவ மனைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வந்த தேர்தல் அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து  நலமடைந்த 192 பேருக்கு  பயிற்சி அளித்து வருகின்றனர்.