சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கத்தின் இன்றுமுதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தங்களது வழக்கமான பயணத்தை இன்று மேற்கொள்ளலாம் என  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்து உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் 6அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், பி.எம்.எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.  இதைத்தொடர்ந்து, 3 கட்ட பேச்சுவார்த்கைள்,  தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையயடுத்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்குவதாக அறிவித்த தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதலே வேலை நிறுத்ததை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், சிஐடியு, திமுக, பாமக உள்பட பல தொழிற்சங்கங்கள்வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவில்லை என அறிவித்து உள்ளது. தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை கொண்டு மக்களுக்கு சிரமமின்றி பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு தரப்பினர் பேருந்துகளை இயக்க வருகின்றனர்.  பேருந்துகளை இயக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து போக்குவரத்து துறை  பணிமனைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ஆனால் வழக்கத்தை விட குறைவாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் இயக்கப்படும் பேருந்தை தடுக்க நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி போராடிக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் பேருந்து சேவை என்பது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அரசால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிகாலை முதலே 8 மண்டலங்களில் உள்ள மேலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி போக்குவரத்து இயக்கத்தை உறுதிப்படுத்தி வருகிறேன். முதலமைச்சரின் உத்தரவின்படி முழுவீச்சில் பேருந்து இயக்கத்தை, போக்குவரத்து துறை செய்து வருகிறது.

சென்னையில்  103.60%, விழுப்புரம் 76.50%, சேலம் 96.99%, கோவை 95.48%, கும்பகோணம் 82.98%, மதுரை 97.41%, நெல்லை 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலை 6 மணி நிலவரப்படி கோட்டம் வாரியாக பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் பேருந்துகளில் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு கூடாது என பல தொழிற்சங்கங்கள் பணி செய்து கொண்டுள்ளனர். பொதுமக்களை பாதிக்காத வண்ணம் பணிக்கு வருமாறு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினரை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.