மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறை கதவு சரியில்லாததால் பயணம் முழுவதும் கழிவறைக்குள்ளேயே பயணி ஒருவர் சிக்கிக்கொண்டார்.

மும்பையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் SG-268 நேற்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இருக்கை எண் 14Dயில் இருந்த பயணி கழிவறை சென்றார்.

கழிவறைக்கு சென்ற அவர் நீண்டநேரம் ஆகியும் திரும்பாத நிலையில் கழிவறைக்குள் இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்டதை அடுத்து விமானப் பணியாளர்கள் கதவை திறக்க முயற்சி செய்தனர்.

அப்போது தான் அந்த கழிவறை கதவின் தாழ்ப்பாள் சரியாக இயங்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

பின்னர் நின்ற நேரம் அதை திறக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததை அடுத்து, “சார் நாங்கள் எங்களால் முடிந்தவரை கதவைத் திறக்க முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. பீதியடைய வேண்டாம். சில நிமிடங்களில் நாங்கள் தரையிறங்குகிறோம்.

எனவே கமோட் மூடியை மூடிவிட்டு அதன் மீது பாதுகாப்பாக அமர்ந்து கொள்ளுங்கள். தரையிறங்கியதும் பொறியாளர் வருவார்” என்று ஒரு காகிதத்தில் எழுதி கதவிடுக்கு வழியாக உள்ளே சொருகினர்.

இதனையடுத்து அதிகாலை 3:42 மணிக்கு பெங்களூரில் தரையிறங்கியதும் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த கதவை திறந்து பயணி மீட்கப்பட்டார்.

சுமார் 2 மணி நேரம் பயணி ஒருவர் கழிவறையில் சிக்கிக் கொண்ட விவகாரம் சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து ஸ்பைஸ் ஜெட் வருத்தம் தெரிவித்துள்ளது.