கொச்சி:  கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை குருவாயூர்  கிருஷ்ணன் கோயிலில்  சாதி தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.  தொடர்ந்து, நடிகர் சுரேஷ்கோபி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.

கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நேற்று மாலை தனி விமானத்தில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வந்தார். இரவு வந்த  பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமத் கான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, கொச்சியில் நடந்த பிரமாண்ட ரோடு-ஷோவில் பங்கேற்றார்.  கொச்சியில் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்த மோடிக்கு சாலைகளின் இரு புறங்களிலும் குவிந்திருந்த பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.  சாலையில் இருபுறமும் நின்ற பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.

பிரதமர் மோடி இன்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக குருவாயூருக்கு வந்தார். அவர் இன்று காலை 7.35 மணியளவில் ஸ்ரீகிருஷ்ண கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்பு அங்கிருந்து காரில்  பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து,  குருவாயூரப்பன் கோயிலில் மோடி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர்,  கொச்சியின் வில்லிங்டன் தீவில், ரூ.4,000 கோடியில் கட்டப்பட்ட கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய உலர் கப்பல்துறையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.