புதுச்சேரி:  யாழ்ப்பாணம் – காரைக்கால் (புதுச்சேரி)  இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  இதனால், விரைவில் கடல்வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், காரைக்காலில் இருந்து 3மணி நேரத்தில் இலங்கையை சென்றடையலாம்.

ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) தமிழகம் வந்திருந்த  இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்  ஆகியோர், இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியிருப்பதாகவும், “காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத்துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும். இரு நாட்டுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என  தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வெங்கடேஸ்வரன் துணைநிலை ஆளுநர் தமிழிசையை இன்று சந்தித்தார்.  அப்போது, “காரைக்காலில்- இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து பற்றி முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தற்போது, புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டால், காரைக்காலில் இருந்து இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.