ஜோலர்ப்பேட்டை
ர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்ப்பேட்டை அருகே வரும் போது திடீர் எனப் புகை வந்ததால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
தினமும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை வரை இரு மார்க்கத்திலும் சொர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப் பட்டு வருகிறது. சொர்ணா எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு பங்காரப்பேட்டை, குப்பம், பச்சூர் வழியாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பக்கிரிதக்கா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது ரயில் என்ஜினிலிருந்து 3-வது பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் இதைப் பார்த்து கடும் பீதி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். ஆனால் அதற்குள் ரெயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்குள் நுழைந்து விட்டது. என்ஜின் ஓட்டுநர் மீனா அந்த இடத்திலேயே ரயிலை நிறுத்தி ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்று சோதனை செய்த போது புகை எதுவும் வரவில்லை. அதிகாரிகள் ரயில் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தை நெருங்கியதால் வேகத்தைக் குறைக்க பிரேக் போடும்போது சக்கரத்தில் இருந்து புகை வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
ரயில் மீண்டும் 4.30 மணிக்குப் பெங்களூருவுக்குப் புறப்படும். முன்பு ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் போது புகை வரவில்லை என்பதால் ரயிலில் எந்தவித பிரச்சினையும் இல்லை என அறிவித்த பிறகு ரயில் பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது.