டெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா2021 நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த  தொடரில், எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே பல மசோதாக்களை மத்தியஅரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி, நேற்று (20ந்தேதி) தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள்  கோரிக்கை விடுத்தன. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் மசோதா தாக்கல் செய்து, வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தேர்தல் சீர்திருத்த மசோதா2021 இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாநிலங்களவை ஏற்கனவே 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமளி துமளியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்தியஅரசு தீவிரமாக உள்ளது.