சென்னை:

காவிரி பிரச்சினையில் கட்சி முக்கியமல்ல, விவசாயிகள் நலன்தான் முக்கியம் என்று அதிரடியாக கூறினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயணசாமி கூறியதாவது,

விவசாயிகள் நலனுக்காக எந்த தியாகத்திற்கும் புதுச்சேரி அரசு  செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்த முதல்வர்  நாராயணசாமி,காவிரி நீரை புதுச்சேரிக்கு தராமல் தமிழக, கர்நாடக அரசுகள் வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் எங்களது காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆனாலும் காவிரி பிரச்சினை யில் எங்களது மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த பிரச்சினையை பொறுத்தவரை  எங்கள் கட்சியின் மேலிடம் குறித்து நாங்கள் கவலைப்பட வில்லை என்றும், எங்களுக்கு புதுச்சேரி மாநில விவசாயிகளின் நலன்தான் முக்கியம் என்றும் நாராயணசாமி மீண்டும் தெளிவுபடுத்தினார்.