மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர  ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர், தங்களை நிரந்தரம் செய்யக்கோரி கருணை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:
“அனைவருக்கும் கல்வி இயக்கம்  ( SSA) திட்டம் மூலமாக, ஓவியம், உடற்கல்வி, தையல், இசை, கணினி, கட்டிடக்கலை தோட்டக்கலை வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களுக்கு   16549  பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.   இதற்கான அரசாணை கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ( பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண்-177)
இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரிகர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஆரம்பத்தில் வழங்கப்பட்டது.   பின்னர் 2014ஆண்டு முதல்  7000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்க படுகிறது.
மிகக் குறைந்த ஊதியமாக இருந்தாலும், என்றாவது பணி நிரந்தரம் ஆக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வறுமையிலும் செம்மையாக பாடம் நடத்தி வருகிறோம்.

கோப்புபடம் ( கடந்த பிப்ரவரி மாதம், பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டம்)
கோப்புபடம் ( கடந்த பிப்ரவரி மாதம், பகுதி நேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டம்)

இவர்கள் ஐந்து  ஆண்டுகளாக பகுதி நேர பணியில் குறைந்த ஊதியத்துடன்  வேலை பார்த்து வருகிறார்கள்.
பணி நிரந்தரமாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே பணி புரிந்து இது வரை 51ஆசிரியர்கள் இறந்தும் விட்டார்கள்.   பணி நிரந்தரம் ஆகாமலேயே 58 ஆசிரியர்கள்  பணி ஓய்வும் பெற்றுள்ளார்கள்.
இப்போது பணிபுரியும் பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 50 வயதை கடந்த சுமார் 4000 பேர் இருக்கிறார்கள். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 9000 பேர்.
இனியாவது தகுதியான எங்களை பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்வில் அரசு ஒளியேற்ற வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு பகுதிநேர சிறப்பாசிரியர்களும் தமிழ் நாடு அரசுக்கு பத்து மனுக்கள் விகிதம் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் மனுக்களை வருகின்ற 20-6-2016 திங்கட்கிழமை அனுப்ப  இருக்கிறோம்.
மாண்புமிகு  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இந்த கருணை மனுக்களை தாயுள்ளத்துடன் பரிசீலனை  செய்து 16549 பகுதிநேர சிறப்பாசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்வார்கள் என்ற நம்புகிறோம்” என்று பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தார்கள்.