டில்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி தொடங்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றப் பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 17ம் தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதிவரை நடைபெற்றது.

அப்போது முத்தலாக் தடை மசோதா, மோட்டார் வாகன திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உட்பட 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்த நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றம் நடைபெறும் தேதிகளை முடிவு செய்வது தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது. இதில்,  குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 18-ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டஉள்ளதாகவும், சுமார் 1 மாத காலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தொடரின்போது,  நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதுடன்,  உள்நாட்டு கம்பெனி களுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு, மின்சார சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பு  இரண்டு முக்கிய அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு  ஈடுபடும் என தெரிகிறது.