சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் இன்று முதல் மண்டலம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் ஆலோசனைகளை பெற உள்ளனர்.
அதிமுகவில் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் பணிக் குழுக்களை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இக்குழுவில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, ஓ.எஸ்.மணியன், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து, தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறும் வகையில் இன்றுமுதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அதன்படி, இன்று சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டலத்திற்கு செல்லும் இந்த குழுவினர், பொதுமக்களை சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்க உள்ளனர்.