சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு தொடர்பாக பாஜக தலைமை தேமுதிக தலைமையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

நடப்பாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024 ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை திராவிட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்து வந்த பாஜக இந்த முறை தனது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானத்துள்ளது. அதன்படி,   தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்த மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல், சென்னையில் முகாமிட்டு, பாஜக கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.  இடையிடையே  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

பியூஸ் கோயல் ஏற்கனவே ஏற்கனவே கடந்த 2014 தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது தொடர்பாக  பேச்சுவார்த்தைகளில் தேமுதிக உள்பட சில கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். ர். அந்த வகையில் தற்போதும்  தே.மு.தி.க.வுடன்  கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறத.

தேமுதிக தலைவர் மறைந்த  விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற பியூஷ்கோயல் பிரேமலதாவுக்கு விஜயகாந்த் மறைவுக்கு  ஆறுதல் கூறினார். அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் கரு.நாகராஜன், காளிதாஸ், அதேபோல் தே.மு.தி.க. நிர்வாகி பார்த்தசாரதி ஆகியோரும் உடன் இருந்தார்கள். இதைத்தொடர்ந்து இருதரப்பினரும், தமிழக மற்றும் தேசிய  அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் பியூஷ்கோயல், பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகிய 3 பேரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பின் போது பா.ஜனதா கூட்டணிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதி எண்ணிக்கை பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது. தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்பு பற்றி கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷிடம் பியூஷ்கோயல் தெரிவிப்பார். பொங்கலுக்கு பிறகு பி.எல்.சந்தோஷ் சென்னை வர உள்ளார். அப்போது தமிழக நிர்வாகிகளுடனும் கலந்து பேசி தொகுதிகள் ஒதுக்குவது பற்றிய பேச்சுக்கள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் தே.மு.தி.க. கறாராக இருந்தது. ஆனால் இப்போது கட்சி பலவீனம் அடைந்துள்ளது. ஏற்கனவே தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கு பற்றி அண்ணாமலை தனியாக ஆய்வு நடத்தி புள்ளி விபரங்களுடன் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.