மும்பை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில்  இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள  நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கான அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் ல் வெளியிடப்படும் என தெரிகிறது. நாடே நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திரும் வேளையில், மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற  காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,   நாடு முழுவதும் அரசியல் கட்சிகள்  தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.

இந்தியாவில் அதிக மக்களவை இடங்களை கொண்ட 2-வது மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அதனால், அங்கு எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பது நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில்,  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா,  சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக களமிறங்குகின்றன.  இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இதையடுத்து,  அந்த கட்சிகளிடையே  கடந்த ஒரு மாதமாக  கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில்  தற்போது, உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. விரைவில் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  அங்கு செயல்பட்டு வரும் வன்சித் பகுஜன் அகாதி என்ற மாநில கட்சி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து இடங்களை பெறும் என்றும்,  சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டி சரத் பவாரிடம் இருந்து ஒரு இடம் பெற்றுக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில்,  பாரதிய ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.