சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக காங்கிரஸ் இடையே வரும் 28ந்தேதி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள், தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்பட அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு தொடர்பான குழுக்களை அமைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றன. திமுக சார்பில், திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல காங்கிரஸ் கட்சியிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திமுக காங்கிரஸ் இடையே வரும் 28ந்தேதி கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 28 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுள்ளன. இந்த முறை கமல்ஹாசனின் மநீம உள்பட மேலும் சில கட்சிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதற்கட்டமாக திமுக, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.