இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனங்கள் மோசடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி பங்கு பத்திரங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக்கியது சுவிட்சர்லாந்து நாட்டின் கிரெடிட் சுவிஸ் வங்கி.
இதனைத் தொடர்ந்து சிட்டி குரூப் வங்கியும் அதானியின் பங்கு பத்திரங்களை வைத்து கடன் வழங்க மறுத்துள்ளது.
இந்த நிலையில், அதானி நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது இதனால் அதானியின் சொத்து மதிப்பு மற்றும் உலக பணக்காரர்கள் வரிசையில் அவரின் நிலையை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இதனால் அதானிக்கு பெருத்த பாதிப்பு இல்லை என்ற போதும் சாமானிய மக்களின் வங்கி சேமிப்பு பணத்தை எல்லாம் மொத்தமாக கடனாக வாரிக்கொடுத்த வங்கிகளின் நிலை அந்தரத்தில் ஊசலாடுகிறது.
இதனால் அதானியின் சொத்துக்களை முடக்கி வைத்து பொதுமக்கள் பணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளதோடு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கடந்த இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருகின்றன.
இதுவரை எதிர்க்கட்சிகளின் எந்தஒரு கோரிக்கைக்கும் செவிசாய்க்காத மத்திய அரசு இந்த கோரிக்கைக்கும் செவிகொடுப்பதாக இல்லை.
அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் அமளியை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை பிப். 6 ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்துள்ளது.