சென்னை: 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக  திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது,  விமான நிலையத்துக்காக பரந்தூர் பகுதியில் உள்ள  விவசாய நிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களை எடுக்கலாம் என  வலியுறுத்தியதுடன், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழகஅரசு கைவிட வேண்டும் என்று  கூறினார். எந்த ஒன்றிய அரசும் நிலங்களை கையகப்படுத்தும் போது பாதிக்கப்பட்டச் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே இல்லை.  மாநில அரசு சொன்னால் செய்யும் எனவே மாநில அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும், மக்களை பாதிக்காதவாறு மாற்று இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறியுள்ளார்.

 

இந்த தீர்மானத்தின்மீது பேசிய  காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை, பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது, அவர்கள் பாதிக்காதவாறு விமான நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

பாமக எம்எல்ஏ ஜிகே மணி பேசும்போது, விவசாயிகளின் வாழ்வதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையம் அவசியமானது. விமான நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றவர், நில அமைப்பு, தொழில்நுட்ப காரணங்களை கருத்தில் கொண்டே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றவ்ர, வளர்ச்சி மக்கள் மக்கள் பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், சென்னையில் புதிய விமான நிலையம் அமைய வேண்டியது அவசியம் என்றதுடன், சென்னை அருகே புதிய விமான நிலையத்தை எங்கே அமைத்தாலும் ஏரிகள், விவசாய நிலங்களில்தான் அமைக்க வேண்டியது இருக்கும் என்றார்.

தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால் புதிய விமான நிலையம் அவசியம் என்று கூறியதுடன், நாட்டிலேயே அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 3ம் இடத்தில் இருந்தது; தற்போது 5ம் இடத்தில் உள்ளது. அதுபோல  சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அதுபோன்ற வசதிகள் இல்லை.  அடுத்த 30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம் என்று விளக்கியதுடன்,  10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.