சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் 3,337 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் 3வது நாள் மற்றும் கடைநாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய சபை நிகழ்வுகளில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  அப்போது,  தமிழக வளர்ச்சிக்காக தினமும் திட்டங்களை தீட்டி வருகிறோம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் கருதி  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. காலை உணவு, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை மொத்தம் 3,337 அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிப்புகள் மீதான தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என முதல்வர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று  தெரிவித்தார்.

பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறியவர், பழுதடைந்த சாலைகளை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு ரூ.4,067 கி.மீ சாலை மேம்படுத்தப்படும் என்றும் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55,567 கி.மீ. சாலைகளில் 6,045 கி.மீ. நீள சாலைகள் சேதமடைந்துள்ளன.

ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேருந்துகளில் இலவசமாக பயணித்ததன் மூலம் மகளிருக்கு சேமிப்பாக ரூ.2,000 கோடி மாறியுள்ளது எனவும், அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1.70 கோடியாக அதிகரித்துள்ளது எனவும் முதல்வர் தெரிவித்தார்.