காஞ்சிபுரம்: பல்வேறு சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் மீறி பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது. இதற்கான அவகாசம் தற்போது 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது பெரிய விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது. இந்த விமான நிலையம், பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் 13 கிராமங்கள் பாதிக்கப்படுவதுடன், நர் நிலைகள், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது.
இதனால், அதற்கு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் 150-நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மாநில அரசு கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு அதிக நிவாரணம் வழங்கங்பபடும் என ஆசை காட்டி வருவதுடன், காவல்துறையை கொண்டு கிராமங்களை நிறுத்தி மிரட்டி வருகிறது. அதே வேளையில், வெளி ஆட்கள் இந்த கிராமங்களுக்குள் செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக பணிகளுக்கு ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது.
முதலாவதாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் கடந்த 6-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக மாஸ்டர் பிளான், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானது.
கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பொறுத்து, அது தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.