திருவனந்தபுரம்: பங்குனி உத்திரம் மார்ச் 24 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலையில் வரும் 16ந்தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தை யொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும்  13-ந்தேதி திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

உத்திரம் நட்சத்திரம் ஒவ்வொரு மாதம் வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திற்கு தனிசிறப்புண்டு. பங்குனி உத்திரம் என்பது, தமிழ் மாதத்தில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரமான உத்திரம் என இவை இரண்டும் சேர்ந்த நாள்  தான் பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பங்குனி உத்திர நாளில்தான், ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக அவதரித்தார் என்கிறது ஐயப்ப சுவாமி புராணம். மேலும் சபரிமலை ஸ்தல புராணமும் பங்குனி உத்திரத்தையும் அதன் மகிமையையும் விவரித்துள்ளது.

பங்குனி உத்திரம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 நாட்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோவில்  நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.   கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.  மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.  தொடர்ந்து வரும் 16-ந் தேதி பங்குனி உத்திரம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது.  வரும் 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

25-ந் தேதி அன்று நடைபெறும்  10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.