சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்த ஊராட்சிமன்ற வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஒன்றியம் ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் பதவி  பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதே ஊரைச் சேர்ந்த வெற்றி மாறன் (வயது 48), அவரது மனைவி சபரியம்மாள் (வயது 46), மதிமுகவைச் சேர்ந்த ராமசாமி ஆகியோர் இப்பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்தனர். வெற்றிமாறன் ஏற்கனவே மதிமுகவில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றிமாறன் வாபஸ் பெறக்கோரி மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான வெற்றிமாறன், இதுகுறித்து முதல்வரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்து சென்னை வந்தார். முதல்வரை சந்திக்க முடியாததால்,  கடந்த 27 ஆம் தேதி  சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டின் முன்பு,  தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதைக்கண்ட காவல்துறையினர், அவர்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து,  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வெற்றிமாறன் உயிரிழந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு முன்பு சுயேச்சை வேட்பாளர் தீக்குளிப்பு! காரணம் என்ன?