டில்லி,

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் பனாமா பேப்பர்ஸ் தகவல்களை வைத்து, பாகிஸ்தான் பிரதமர் மீது தொடரப்பட்ட வழக்கில், இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் குற்றவாளி என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற பெஞ்சு தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பனாமா பேப்பர்சில் கூறப்பட்டுள்ள இந்தியர்களின்மீது நடவடிக்கை எப்போது என்று கேள்வி எழுந்துள்ளது.

வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism)  ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

பனாமா நாட்டின் மொசாக் பொன் சேகா சட்ட நிறுவனத்தின் உதவி யுடன் பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது.

உலகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பனாமா பேப்பரில் வெளியான தகவல்கள் குறிந்து அந்தந்த நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள 475 பேர்கள் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

ஏற்கனவே பனாமா பேப்பர்ஸ் தகவல் குறித்து,விசாரணை செய்ய முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தி விசாரணை நடத்தியது.

அதுபோல, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் பேசிய அருண்ஜேட்லி, பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய பட்டியலில் உள்ள எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை இந்த புகாரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் குறித்த தகவலை வெளியிட்ட  பனாமா பேப்பர்சில்,  இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 475 முக்கியஸ்தர்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியானது.

அதில், வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், முன்னாள் பாரோன் குழுவின் கபீர் முல்சந்தனானி மற்றும் பேஷன் டி.வி இந்திய விளம்பரதாரரான அமன் குப்தா,

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி,

மேற்குவங்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஷிஷிர் பஜோரியா, டில்லி லோக்சட்டா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியர்கள் தவிர பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி,  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, பாக்கிஸ்தான் தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தற்போது பாகிஸ்தானில், இதுகுறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இந்தியா வில், கிடப்பில் போடப்பட்ட  பனாமா பேப்பர்ஸ் குறித்த விசாரணை எப்போது நடைபெறும் என்றும்,

இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்று நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.