திருப்பூர்: பல்லடம் மின்மயான முறைகேடு  தொடர்பாக  சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பல்லடம் நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதாமணி  இருந்து வருகிறார். இவர்மீது திமுக கவுன்சிலர்களே புகார்கள் எழுப்பியுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில்,  பல்லடம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கான பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன.

இந்த மின்மயனா பணிகள்  தொடங்கப்பட்டு, சுமார் 25 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்தன. ஆனால், எந்தவித முறையான காரணமும் இன்றி திடீரென அந்தப் பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில், ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின்மயானம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,  ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.  “கால்வாசி பணிகள் முடிந்த பிறகு திடீரென பணிகளை நிறுத்த உத்தரவிட்டது ஏன்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்று அதிருப்தி தெரிவித்தார்.

இந்த வழக்கை சிபிஐ முழுமையாக விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிய வேண்டும். மத்திய தணிக்கை துறை (CAG) இந்தத் திட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக,  பல்லடம் நகராட்சி சார்பில், சுமார் ₹1.40 கோடி செலவில் மின் மயானம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. பல்லடம் பகுதியில் முறையான மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை 16 கி.மீ தொலைவில் உள்ள திருப்பூர் மாநகராட்சி மின் மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்லடம் அடுத்த வெங்கிட்டாபுரத்தில் அரசு நிலத்தில் மின் மயானம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டது.  பணிக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கட்டுமான அனுமதி வழங்கப்படாமல் பணி நிறுத்தப்பட்டது. இதில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணத்தை வீணடித்த அதிகாரிகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]