திண்டுக்கல்: மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என  பழனி கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும்.  பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம் அதனால்தான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று சொல்கிறார். விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும்.  சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

இந்த நிலையில்,  பழநி முருக்கோவில் மார்கழி மாதத்தையொட்டி,  வரும் டிச. 17 முதல் ஜன. 15ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களான திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் டிச. 17 முதல் ஜன. 15ம் தேதி வரை தனுர் எனப்படும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

பழனி திருக்கோயிலின் உபகோயிலான பழநி ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரத்தில் உள்ள அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் டிச. 23ம் தேதி வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும்.

பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு டிச. 27ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெறும். ஜன. 15ம் தேதி தனுர் மாத பூஜை பூர்த்தி நடைபெறும்

இவ்வாறு கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.