பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு தீய நாட்டில் அவை பாதுகாப்பாக இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.

இந்தியா – பாகிஸ்தான் போர் அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் இருப்பதாகவும் அதை உடனடியாக நிறுத்த எச்சரிக்கை விடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் கூறியிருந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

‘ஆபரேஷன் சிந்தூர்’-க்குப் பிறகு முதல் பயணமாக ஸ்ரீநகருக்கு வந்த ராஜ்நாத், பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலையும் மீறி இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியைக் காட்டுகிறது என்று கூறினார்.

பாகிஸ்தான் எத்தனை முறை பொறுப்பற்ற முறையில் இந்தியாவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்பதை முழு உலகமும் கண்டிருக்கிறது. இன்று, ஸ்ரீநகரின் மண்ணிலிருந்து, நான் இந்தக் கேள்வியை முழு உலகிற்கும் முன்பாக எழுப்ப விரும்புகிறேன். இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளனவா?

“பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ராணுவ வீரர்களுடனான ஒரு உரையாடலில், ராஜ்நாத், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது இந்தியா தனது வரலாற்றில் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுத்த மிகப்பெரிய நடவடிக்கை என்று விவரித்தார்.

கடந்த 35-40 ஆண்டுகளாக, இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை இந்தியா இன்று முழு உலகிற்கும் தெளிவுபடுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியாவை குறிவைத்து நமது சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றனர். ஆனால் நாம் பாகிஸ்தானை நிலைகுலையைச் செய்துள்ளோம் என்று கூறினார்.

மேலும், 21 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றதை நினைவு கூர்ந்த சிங், பாகிஸ்தான் இனி தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது என்று அளித்த வாக்குறுதியையும் நினைவு கூர்ந்தார்.