இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தயாரிப்புகள் அதிகளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தோஹாவில் நடந்த ஒரு நிகழ்வில் டிரம்ப் டிம் குக்கிடம், நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் தனது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகள் மீதான வரியை அமெரிக்கா அதிகரித்ததற்கு பதிலடியாக அமெரிக்கா மீது இந்தியா பரஸ்பர வரி உயர்வு மேற்கொள்ளப்போவதாக எச்சரித்த நிலையில் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், பாகிஸ்தானுடன் போரை நிறுத்தினால் இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இருநாடுகளும் இதுதொடர்பாக விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டும் என்றும் கூறப்படுகிறது.