புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

pakistan

கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ் இ முகமது நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக் இந்தியா குற்றம்சாட்டி வந்தது.

பாதுகாப்பு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாக பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்ட மிகவும் வேண்டத்தக்க நாடு என்ற அந்தஸ்தை நீக்கியதுடன், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரியை உயர்த்தி இந்திய அரசு உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தானிற்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்தார். இதனால் இரு நாட்டு எல்லையில் வீரர்கள் அவ்வபோது தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்கள் என தனது ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்தியா மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தானிற்கு எதிராகவும் தொடர்ந்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் அந்நாட்டை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பிரான்சிஸ்கோ ஆண்டனியோ கார்ட்டொரியலுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ” புல்வாமா தாக்குதலில் இந்தியா தனது சொந்த கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் தோல்வியை மறைக்க, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது பழி போடுகிறது. உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி பதற்றமான சூழலை இந்தியா உருவாக்குகிறது.

இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். அவரை போலவே மூத்த அரசியர் தலைவர்களுக்கு அச்சுறுத்தி வருகின்றனர். சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறி அதனை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு தற்போது நிலவும் பதற்றத்தை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளாரை வலியுறுத்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று ஐ.நா. வின் மனித உரிமை ஆணையத்திற்கும் பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. அதில் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.