இஸ்லாமாபாத்:

விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விண்வெளி சாதனைகளைக் கண்டு விரக்தியில் உள்ள பாகிஸ்தான், தாங்களும் விண்ணுக்கு விண்வெளி வீரரை அனுப்புவோம் என்று கூறி வருகிறது.

இந்த நிலையில் சீனா உதவியுடன் விண்வெளிக்கு ஆள் அனுப்ப பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பயணத்துக்கு தேவையான  விண்வெளி வீரருக்கான தேர்வு செயல்முறை 2020 ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும், முதல்கட்ட 50 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர், அதில் சிறந்தவர்களை கொண்டு, பட்டியல் 25 ஆகக் குறைக்கப்படும். பிறகு, அதிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். 2022 ஆம் ஆண்டில் எங்கள் முதல் நபரை விண்வெளிக்கு அனுப்புவோம். இது எங்கள் நாட்டின் மிகப்பெரிய விண்வெளி நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

விண்வெளி பயணத்திற்கான தேர்வு நடைமுறையில், பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மேலும்,  1963 ஆம் ஆண்டில் அப்போதைய சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (யு.எஸ்.எஸ்.ஆர்) அதன் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பிய பின்னர் ஆசியாவில் இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது என்று கூறிய அமைச்சசர், விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் விண்வெளி அறிவியல் கல்வி மையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு  சீன ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தியதாக தெரிவித்த ஃபவாத் சவுத்ரி,  சீனாவின் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து சீன லாங் மார்ச் (எல்எம் -2 சி) ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டதாகவும்கூறினார்.

இந்த இரு செயற்கைகோளில்  ஒன்று ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் (பிஆர்எஸ்எஸ் 1)  என்றும் மற்றொன்று ,பூமி கண்காணிப்பு மற்றும் ஒளியியல் செயற்கைக்கோள் PAK-TES-1A ) என்றும் தெரிவித்து உள்ளார்.