இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரின் நாடாளுமன்ற பதிலானது, கடந்தாண்டு காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அந்நாடு இருந்துள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது.
பாகிஸ்தானின் அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான ஃபவாத் செளத்ரி.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சியால் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த ஃபவாத் செளத்ரி, “புலவாமாவில் கிடைத்த நமக்கான வெற்றியானது, பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான இந்த நாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும். நீங்களும் நாங்களும் இந்த வெற்றியின் பகுதிகள்” என்றுள்ளார்.
தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மிக வேண்டியவராக கருதப்படும் ஃபவாத் செளத்ரி, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர், சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் ஃபவாத் செளத்ரி.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பயந்து, அதன் முன்னால் மண்டியிட்டு, அபிநந்தனை விடுவித்துவிட்டது இம்ரான்கான் அரசு என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும்போது மேற்கண்ட பதிலை அளித்துள்ளார் ஃபவாத் செளத்ரி.