லாகூர்:

பாகிஸ்தானில் கடந்த 72 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த சீக்கியர்கள் கோவில், தற்போது வழிபாட்டிற் காக மீண்டும்  திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேறி இந்தியாவில் குடியேறிய பின்னர் 1947 முதல் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா  மூடப்பட்டது. தற்போது அந்த குருத்வாரா திறக்கப்பட்டு உள்ளது. குருநானக் தேவின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களின் வழிபாட்டுக்காக குருத்வாரா திறக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருக்கும் ஹஸ்திநாக்ரி பகுதியில் உள்ளது பாய் பீபா சிங் சீக்கியர்கள் கோவில். இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தானில் இருந்த இந்தியர்கள் கிளம்பிய பிறகு அந்த கோவில் மூடப்பட்டது. இந்த கோவில் கடந்த 2018ம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில், தற்போது ஜீலம் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோ கவுரவம் பெற்ற பாரம்பரியம் மிக்க குருத்வாராவை பாகிஸ்தான் அரசாங்கம் திறந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சோவா சாஹிப் குருத்வாரா  எழுபத்திரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் குருநானக் தேவின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களுக்கு குருத்வாரா திறக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ரோஹ்தாஸ் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள இந்த  குருத்வாரா சோவா சாஹிப், பல உயர் அதிகாரிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு வண்ணமயமான விழாவில் மீண்டும் திறக்கப்பட்டது.

சீக்கிய சமூக உறுப்பினர்கள் நிகழ்த்திய ‘அர்தாஸ்’ (பிரார்த்தனை) மற்றும் ‘கீர்த்தன்கள்’ (பக்தி பாடல்கள்) விழா தொடங்கியது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் புனித இடங்களை கவனிக்கும் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ஈடிபிபி) தலைவர் டாக்டர் அமர் அகமது பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்திக் கமிட்டி (பி.எஸ்.ஜி.பி.சி) தலைவர் சர்தார் சத்வந்த் சிங் கலந்து கொண்டார்.

“குருத்வாரா சோவா சாஹிப் வழிபாடு மற்றும் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு சீக்கியர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது … அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தாலும் அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் வந்தாலும், இந்த வரலாற்று இடத்தைப் பார்வையிட அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்று எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரிய செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி  தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,  சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் ஏறத்தாழ 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக, அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவுஇசைவு (விசா) இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக வழித்தடம் ஏற்படுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.