ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் வான் வழியில் இந்திய விமானங்கள் பறக்க ஜூன் 28 ஆம் தேதி வரை தடைநீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இந்திய விமானப்படை பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று பாலகோடி பகுதியில் வான் வழி தாக்குதல் நடத்தியது.   இதை ஒட்டி பாகிஸ்தான் தனது வான் வழியில் உள்ள 11 பாதையிலும் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பிஷ்கெக் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்ற போது மே மாதம் 21 அன்று  அவர் விமானம் பாகிஸ்தான் மீது பறந்து செல்ல அனுமதி அளித்தது.    அதன் பிறகு கடந்த புதன்கிழமை அன்று ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்ற பிரதமர் மோடி யின் விமானத்துக்கு அனுமதி அளித்தது.  ஆனால் மோடி சென்ற விமானம் பாகிஸ்தான் வான் வழியில் பயணம் செய்யவில்லை.

மூடிய 11 வான் வழியில் இரு வழிகளை மட்டுமே திறந்த பாகிஸ்தான் அரசு மற்ற வழிகளுக்கு தடையை நீக்கவில்லை.    இந்த தடையை மே 15 ஆம் தேதி வரை அறிவித்த பாகிஸ்தான் அரசு அதன் பிறகு மே 30 வரை நீட்டித்தது.   அதன் பிறகு அந்த தடையை ஜூன் 15 வரை மீண்டும் நீட்டித்தது.  நேற்று வெளியான அறிவிப்பின்படி இந்த தடை ஜூன் மாதம் 28 வரை நீட்டித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.