பாகிஸ்தானில் உள்ள பலூச் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் அல்-அட்லின் இரண்டு முக்கிய தளங்கள் மீது ஈரான் ராணுவம் செவ்வாய்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்.

பலூச் போராளிக் குழுவின் இரண்டு முக்கிய தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மீதான இந்த வான்வழி தாக்குதலை கண்டித்துள்ள அந்நாட்டு அரசு இது பாகிஸ்தானின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது இதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

ஈரானில் 11 போலீஸ்காரர்களைக் கொன்ற தாக்குதலுக்கு ஜெய்ஷ்-அல்-அட்ல் இயக்கம் சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானுக்கு ஈரான் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலை அடுத்து அதன் நட்பு நாடான சீனா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கூறிவருகின்றனர்.

இருந்தபோதும், ஈரானுடன் பல்வேறு வர்த்தக மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்த ஒப்பந்தங்களை சீனா மேற்கொண்டுள்ளதை அடுத்து பாகிஸ்தானை விட ஈரானுடனான நட்புறவை பாதுகாக்கவே சீனா முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது.