அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ) நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் சையத்’ விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டதை அடுத்து, தனது யுஏஇ பயணத்தை ரத்துசெய்துள்ளார் பாகிஸ்தான் செனட் தலைவர் சாதிக் சஞ்ரானி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த ஏப்ரல் மாதத்தில் மோடிக்கான இந்த விருதை அறிவித்திருந்தது யுஏஇ. வளைகுடா நாடுகளுக்கான தனது சுற்றுப்பயண திட்டத்தில், யுஏஇ சென்றிருந்தபோது மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

எனவே, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், தனது செனட் தலைவர் யுஏஇ பயணத்தை ரத்து செய்துவிட்டது. யுஏஇ அரசின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் செனட் தலைவரின் தலைமையிலான குழுவினர் ஆகஸ்ட் 25 முதல் 28ம் தேதி வரை யுஏஇ நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

யுஏஇ நாட்டின் நாடாளுமன்றவாதிகளை சந்திப்பது இந்தக் குழுவின் முக்கிய பயணத் திட்டம். தனக்கு வழங்கப்பட்ட கவுரவத்திற்காக யுஏஇ அரசிற்கு நன்றி தெரிவித்தள்ள பிரதமர் மோடி, இந்த விருதை 130 கோடி இந்திய மக்களின் திறன்கள் மற்றும் ஆற்றலுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.