சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது, இந்திய வீரர் அஸ்வினை ஸ்லெட்ஜிங் செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே.
இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பதற்காக, மராத்தான் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் அஸ்வின். தன் உடலிலிருந்த காயங்களையும் பொருட்படுத்தாமல் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார் அஸ்வின். ஆனால், பின்னால் கீப்பிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னே, அஸ்வினை அடிக்கடி ஸ்லெட்ஜிங் செய்துகொண்டே இருந்தார்.
இந்த செயல் அவர்மீது விமர்சனங்களைக் கிளப்பியது. அதேசமயத்தில், அவர், பன்ட் மற்றும் விஹாரிக்கானது என்று மொத்தம் 3 கேட்ச்சுகளை முக்கியமான கட்டத்தில் கோட்டைவிட்டார். இதனால், ஆஸ்திரேலியாவின் வெற்றியும் பறிபோனது.
பெய்னே கூறியிருப்பதாவது, “நேற்று போட்டி முடிந்ததும் அஸ்வினிடம் பேசினேன். போட்டியின் முடிவில் நான் முட்டாளாக ஆகிவிட்டேனல்லவா? என்றேன். நீ வாயைத் திறந்தாய், பிறகு கேட்சை தவறவிட்டு அது நகைப்பிற்குள்ளாகி விட்டது என்றார் அவர்.
நேற்றையப் போட்டியில் எனது தலைமைத்துவ பண்பு போதுமானதாக இருக்கவில்லை. போட்டியின் அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டேன். அது எனது செயல்பாட்டிலும் பாதிப்பை உண்டாக்கி, கேட்ச்சுகளை கோட்டைவிட வைத்துவிட்டது” என்றுள்ளார் பெய்னே.