சென்னை: தமிழகத்தில்  செப்டம்பர் 1ந்தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் நெல், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கான தொகை  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.  இந்த கொள்முதல் வழக்கமாக இது அக்டோபரில் தொடங்கும். ஆனால், அதை முன்கூட்டியே தொடங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கடந்த   2022-23-ம் ஆண்டு கொள்முதல் (காரீப்) பருவத்தில் 3,497 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு,  செப்டம்பர் 1-ம் தேதி முதலே கொள்முதல் மேற்கொள்ளப்பட்டது.  இதனால்   8.82 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.9,096.67 கோடி வரவு வைக்கப்பட்டது. அந்த பருவத்தில் 9.70 லட்சம் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டும் முன்கூட்டியே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று முதலமைச்சரும் மத்தியஅரசுக்கு அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்ற மத்திய அரசு, செப்டம்பர் 1-ம் தேதி நெல் கொள்முதல் தொடங்க மஅனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலருக்கு மத்திய உணவுத் துறை சார்பு செயலர் அசோக்குமார் வர்மா எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழக அரசு கடந்த ஜூலை21-ம் தேதி கடிதத்தில் கேட்டுக்கொண்டதன்படி, 2023-24 காரிப் பருவத்துக்கான நெல் கொள்முதலை செப்.1-ம் தேதி முதல் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொள்முதல் அளவு, அரவை பருவம் தொடர்பான முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் மாநில உணவுத் துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நெல் கொள்முதலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக உணவுத் துறை விரைவில் தொடங்க உள்ளது.