சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை உள்பட பல இடங்களில் கல்லூரிகள் உள்ளது. இந்த அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் கண்காணித்து வருகிறார். இந்த நிலையில், பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான  கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 152 பேர் உரிய தகுதி பெறாதவர்கள் என கூறி, அதுகுறித்து விளக்கம் அளிக்க, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து அறக்கட்டளை உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி, பிரேமலதா உட்பட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.  ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேரிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் என  உத்தரவிட்டிருந்ததார்.

இதையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர், 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,  தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என உத்தரவிட்டார். உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதியின் உத்தரவு காரணமாக 254 உதவி பேராசிரியர்களின் பணி கேள்விக்குறியாகி உள்ளது.